பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம்


பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 July 2021 7:31 PM GMT (Updated: 2021-07-23T01:01:05+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம் இன்று முதல் நடைபெறுகிறது.

விருதுநகர், ஜூலை
விருதுநகர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி முகாம் இன்று முதல் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி
உலகளாவிய நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நியுமோகோக்கல் தடுப்பூசியை (பி.சி.வி) மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறைமாத பிரசவம் உள்பட பல காரணங்களால் சராசரி எடையை விட குறைந்த எடையில் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் 1.5 கிலோ, அதற்கும் குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் உள்பட பல்வேறு உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி இல்லாமல் இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நோய் தொற்றுகள் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் போதிய அளவுக்கு இருக்காது. இதில் நுரையீரல் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க நியுமோகோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது.
குழந்தை பிறந்ததில் இருந்து முறையே ஒன்றரை மாதம், மூன்றரை மாதம் மற்றும் ஒன்பதாவது மாதம் என மூன்று முறை இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதன் மூலம் நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் காரணமாக ஏற்படும் இறப்புகளை குறைக்க இது உதவும்.
தொடக்கம்
எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்காக நியுமோகோக்கல் தடுப்பூசி மருந்துகள் விருதுநகர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.
இன்று விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார். எனவே இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரசவித்த தாய்மார்கள் பிறந்த குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி நியுமோகோக்கல் தடுப்பூசி போட்டு குழந்தைகளை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story