மலைப்பகுதியில் சாரல் மழை; குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது


மலைப்பகுதியில் சாரல் மழை; குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது
x
தினத்தந்தி 22 July 2021 8:56 PM GMT (Updated: 22 July 2021 8:56 PM GMT)

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.

சாரல் மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை  பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 109.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 547 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 1,405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.48 அடியாக உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 72.35 அடியாக உள்ளது. 

கடனா, ராமநதி

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் இருந்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 68.90 அடியாக உள்ளது. நீர்வரத்து 70 கன அடியாக உள்ளது. இந்த தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 66.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 64 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.32 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 25 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் உள்ளது.
குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் 8 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 123.25 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாகவும், வெளியேற்றம் 20 கன அடியாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலத்தில் கடந்த மே மாதம் சீசன் தொடங்கியது. அன்று முதல் இருந்தே இங்குள்ள அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. இடையில் சில நாட்கள் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை இல்லாமல் குளிர்ந்த காற்று மட்டும் வீசி வந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே குற்றாலம், தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. ஆனாலும் தினமும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவியைப் பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

Next Story