தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி; 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி; 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

ரூ.1½ கோடிக்கு பொருட்களை விற்பனை செய்து தருவதாக கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு: ரூ.1½ கோடிக்கு பொருட்களை விற்பனை செய்து தருவதாக கூறி தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.26 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

தனியார் நிதி நிறுவன உரிமையாளர்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா புருசகட்டே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசராவ். இவர் புத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பொருட்களை விற்க சீனிவாசராவ் முடிவு செய்திருந்தார். 

இதுபற்றி அறிந்த அதேப்பகுதியை சேர்ந்த மாயங்க திவாரி, நிதிஷ்குமார், ராஜ்ராவ், ஹரிகேஷ் திவாரி ஆகிய 4 பேரும், சீனிவாசராவை சந்தித்து, நிறுவனத்துக்கு சொந்தமான பொருட்களை ரூ.1½ கோடிக்கு விற்பனை செய்து கொடுப்பதாகவும், அதற்காக மொத்த விற்பனையாளர்களை அழைத்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதனை சீனிவாசராவ் நம்பி உள்ளார். 

ரூ.26 லட்சம் மோசடி

இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி முதல் கடந்த மே மாதம் 19-ந்தேதி வரை பல்வேறு தவணைகளில் சீனிவாசராவிடம் இருந்து ரூ.26 லட்சம் வரை வாங்கி உள்ளனர். இந்த நிலையில், நீண்ட நாட்கள் ஆகியும் மொத்த விற்பனையாளர்களை அவர்கள் அழைத்து வரவில்லை. மேலும் சீனிவாச ராவ் கொடுத்த பணத்தையும் அவர்கள் திரும்ப கொடுக்கவில்லை. 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களை சீனிவாசராவ் தொடர்புகொண்டார். அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சீனிவாசராவ், இதுகுறித்து புத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story