உடுப்பியில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது


உடுப்பியில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 9:02 PM GMT (Updated: 22 July 2021 9:02 PM GMT)

உடுப்பியில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மங்களூரு: உடுப்பியில் நிதி நிறுவன அதிபரை கடத்தி பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நிதி நிறுவன அதிபர் கடத்தல்

துமகூருவை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 25). இவர் உடுப்பி நகரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அவருடைய நிறுவனத்துக்கு வந்த 3 பேர், அசோக் குமாரை தாக்கி அவரை அங்கிருந்து கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அவரை அஜ்ஜரகாடு பகுதியில் கடற்கரையையொட்டி உள்ள விடுதியில் அடைத்து வைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1½ லட்சத்தையும் மர்மநபர்கள் பறித்துள்ளனர். 

பின்னர் மறுநாள் காலை மேலும் பணம் எடுக்க அசோக்குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு அவரை அழைத்து வந்துள்ளனர். அப்போது வங்கிக்குள் சென்ற அசோக்குமாா், திருடன்... திருடன்... என கூச்சலிட்டுள்ளார். இதனால், மர்மநபர்கள் 3 பேரும் அசோக்குமாைர அங்கு விட்டு விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

3 பேர் கைது

இதுகுறித்து அசோக் குமார் உடுப்பி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வங்கியில் இருந்து தப்பி சென்ற கார் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் வாடகைக்கு கார் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து வாடகை கார் நிறுவனத்தில் கொடுத்திருந்த முகவரி மூலம் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விசாரணையில், சந்தோஷ்குமார், அனில் பூஜாரி, மணிகண்டா என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அசோக் குமாருக்கும், சந்தோஷ் குமாருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதன்காரணமாக சந்தோஷ் குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அசோக் குமாரை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story