தம்பதியை ஏமாற்றி வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகைகள், பணம் திருட்டு


தம்பதியை ஏமாற்றி வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகைகள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 22 July 2021 9:02 PM GMT (Updated: 2021-07-23T02:32:41+05:30)

சிக்பள்ளாப்பூரில், முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக அழைத்து சென்று தம்பதியை ஏமாற்றி வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூரில், முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாக அழைத்து சென்று தம்பதியை ஏமாற்றி வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். 

முதியோர் உதவித்தொகை

சிக்பள்ளாப்பூர் டவுனில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பணிமனையை அருகே முஸ்தூர் சாலை பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசய்யா. இவரது மனைவி ரத்னம்மா. நேற்று இவர் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் அங்கு வந்துள்ளார். பின்னர், ‘‘கணவன்-மனைவி இருவருக்கும் தலா மாதம் ரூ.5 ஆயிரம் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருகிறேன். இருவரும் என்னுடன் தபால் அலுவலகத்திற்கு வரவேண்டும்’’ என்று அழைத்துள்ளார்.

 இதை நம்பிய தம்பதி அந்த நபருடன் தபால் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த நபர் தம்பதியை சற்று தூரத்தில் நிற்க சொல்லிவிட்டு அவர் மட்டும் தபால் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். சுமார் 30 நிமிடம் கழித்து திரும்பி வந்த நபர், கூட்டம் அதிகமாக இருப்பதால் மாலை நானே வந்து மீண்டும் தபால் அலுவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பின்னர், சீனிவாசய்யா-ரத்னம்மா தம்பதி வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீடு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து தம்பதி உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் ஆகியவை மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுவிட்டது அவர்களுக்கு தெரியவந்தது.

மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கும், முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மர்ம நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதி இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் இந்த நூதன திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story