ஈரோட்டில் மனநலம் பாதித்தவரை எரித்துக்கொன்ற வாலிபர் கைது


ஈரோட்டில் மனநலம் பாதித்தவரை எரித்துக்கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 July 2021 9:44 PM GMT (Updated: 2021-07-23T03:14:08+05:30)

ஈரோட்டில் மனநலம் பாதித்தவரை எரித்துக்கொன்ற வாலிபரை போலீசாா் கைது செய்தனா்.

ஈரோடு
ஈரோடு பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் அசேன் சேட்டு (வயது 52). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம், கருங்கல்பாளையம் நஞ்சப்பா நகர் காவிரி கரையில் உள்ள மயானத்தில் பிணமாக கிடந்தார்.  தலையில் கல்லை தூக்கிப்போட்டும், எரித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடிவந்தார். இந்த நிலையில் அசேன் சேட்டு கொலை வழக்கு தொடர்பாக ஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதிநகரை சேர்ந்த பிரகாஷ் (36) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வாலிபர் பிரகாஷ் ஈரோட்டில் பழைய இரும்பு கடையில் லோடுமேனாக வேலை செய்து வருவதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட அசேன்சேட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், பிரகாசின் முகத்தில் எச்சில் துப்பியதால் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், நேற்று முன்தினம் நஞ்சப்பா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த அசேன்சேட்டுக்கும், பிரகாசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் அசேன்சேட்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை அருகில் கிடந்த துணிகளை எடுத்து குவித்து தீ வைத்து எரித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story