தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் பணி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி மாவட்டத்தில்  குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் பணி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 July 2021 5:59 PM IST (Updated: 23 July 2021 5:59 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலையில் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இலவச நிமோனியா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலையில் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில் நியூமோகாக்கஸ் தடுப்பூசி இலவசமாக போடும் திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பாத்திமாநகர் நகர்நல மையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பிறந்து 45 நாட்கள் (1 ½ மாதம்) ஆன குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் போஸ்கோராஜா (தூத்துக்குடி), அனிதா (கோவில்பட்டி), மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஜெசிமேரி, உதவி திட்ட அலுவலர் கன்னியம்மாள், பாத்திமாநகர் நல மைய டாக்டர் தினேஷ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
1800 குழந்தைகள்
பின்னர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நிமோனியா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா என்ற கடுமையான சுவாசநோயை தடுக்கும் வகையில் நியூமோகாக்கஸ் தடுப்பு மருந்து உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் தவணையாக 6-வது வாரமும், 2-வது தவணையாக 14-வது வாரமும், ஊக்குவிப்பு தவணையாக 9-வது மாதத்திலும் தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் 1800 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் மற்றும் களப்பணியில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மூலம் அங்கன்வாடி மையத்தில் வைத்தும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதிக விலையுள்ள இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தவறாது தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரசு ஆஸ்பத்திரியில்...
இதே போன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நிமோனியா தடுப்பூசி போடும் பணி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு டீன் நேரு தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பாவலன், உதவி கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story