தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் வேலை


தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் வேலை
x
தினத்தந்தி 23 July 2021 6:22 PM IST (Updated: 23 July 2021 6:22 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் வனிதா பேசினார்.

திருப்பூர்
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என கலந்தாய்வு கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் வனிதா பேசினார்.
கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் மாநகர போலீசாருடன் இணைந்து, தொழில்துறையினருக்கான கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் அதன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பேசியதாவது
நாம் கொரோனா தொற்று 2ம் அலையில் உள்ளோம். தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முதல் அலையில் நாம் முக கவசம், கிருமிநாசினி பயன்படுத்துவதில் தீவிரம் காட்டினோம். ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின், அலட்சியமாக செயல்படுகிறோம்.
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு செல்லவில்லை. தொழிலாளர் நகரமான திருப்பூரில் தொழிலாளர்கள், தங்குமிடம், போக்குவரத்து மற்றும் வேலை ஆகிய இடங்களை கண்காணித்தால் போதும். வேலை செய்யும் இடத்தில் முடிந்த வரை காற்றோட்ட வசதி செய்து தர வேண்டும். நாம் இப்போது பாதுகாப்பாக இருப்பது, எதிர்காலத்துக்கு நல்லது. 3வது அலை வராமல் தடுக்க வேண்டியது, நம்முடைய விழிப்புணர்வில் தான் உள்ளது. தனி மனிதர்களின் விழிப்புணர்வில் தான், கொரோனா தொற்று முழுமையாக ஒழியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தடுப்பூசி 
மாநகர போலீஷ் கமிஷனர் வனிதா பேசியதாவது
தமிழகத்தின் கொரோனா தொற்று அதிகம் உள்ள 7 மாவட்டங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது. வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை வருகை அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது 25 பேர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் தொழில்நகரமான திருப்பூர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தான் கொரோனாவை வெல்லும் ஆயுதம். தொழிலாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும். 3ம் அலையில் குழந்தைகளும் பாதிக்கும் என மருத்துவ உலகம் சொல்வதால், நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசியைத் தவிர வேறு வழியில்லை. தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் நிறுவனங்களில் வேலைக்கு அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைவரின் ஒத்துழைப்பின்றி கொரோனா தொற்றை ஒழிக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தொழில்துறையினர் சார்பில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:- இந்திய தொழில் கூட்டமைப்பு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொழிலாளர்களைக் காப்பாற்றினால் தான், தொழிலைக் காப்பாற்ற முடியும். நோய் எதிர்ப்பாற்றலை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தொழில்துறையினர் ஒத்துழைக்க தயாராக உள்ளோம் என்றனர்.
-


Next Story