திருவாரூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு


திருவாரூரில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 8:30 PM IST (Updated: 23 July 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

திருவாரூர், 

திருவாரூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாசிலாமணி முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நிர்வாகிகள் ஜோசப், முருகையன், சவுந்தராஜன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களின் சட்டப்படியான ஒப்புதல் இல்லாமலும், மத்திய அரசின் முறையான அனுமதி பெறாமலும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

காவிரி ஆணைய கூட்டத்தில் அறிவுறுத்தியபடி இதுவரை இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய தண்ணீரை உரிய அளவு திறந்து விடாமல் இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் கருகி வருகிறது. எனவே மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. தென்பெண்ணையாற்றில் முழுமையாக தண்ணீரே வராத அளவிற்கு கர்நாடக அரசு கட்டியிருக்கிற அணையை மத்திய அரசு அப்புறப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 26-ந் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரம் பேர் பங்கேற்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 100 விவசாயிகள் சென்று பங்கு பெறுவது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதேபோல் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் விவசாய சங்க கூட்டம் ஒன்றிய துணைத்தலைவர் பாலு தலைமையில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட ஒன்றிய செயலாளர் முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ், விவசாய சங்க ஒன்றிய தலைவர் யோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து வரும் 26-ந்தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றியத்திலிருந்து விவசாயிகள் 100 பேர் பங்கேற்பது. 2020-2021- ம் ஆண்டு பயிர்க்காப்பீடு திட்டத்தை அறிவித்து உடனடியாக காப்பீடு தொகையை வழங்க வேண்டும். விவசாய கடன்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் விவசாய சங்க நிர்வாகிகள் சிவசந்திரன், சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வடசங்கேந்தி கீதா மோகன், வந்கநகர் மனோகரன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story