ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க-காங்கிரஸ் கவுன்சிலர்கள் தர்ணா


ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க-காங்கிரஸ் கவுன்சிலர்கள் தர்ணா
x
தினத்தந்தி 23 July 2021 9:46 PM IST (Updated: 23 July 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க-காங்கிரஸ் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிப்பட்டி :
ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வரதராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. அதன்பின்னர் வளர்ச்சிப்பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. 
அப்போது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஆண்டிப்பட்டி ஒன்றிய பொதுநிதியில் ரூ.1.97 கோடி மற்றும் 15-ம் நிதிக்குழு மானியநிதியில் ரூ.1 கோடி இருப்பு உள்ளது என்றும், அந்த நிதியை அனைத்து வார்டு பகுதிகளுக்கும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் பிரித்து வழங்க வேண்டும் என்றும் கூறினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் நிறைவு பெறுவதாக அறிவித்துவிட்டு ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியேறினர். 
இதனையடுத்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி கவுன்சிலர்கள் கூட்டஅரங்கில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றியக்குழு தலைவரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் ஒருமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story