போக்சோ குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு
நீலகிரியில் போக்சோ குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி
நீலகிரியில் போக்சோ குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
போக்சோ வழக்கு
நீலகிரி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 18 வயது பூர்த்தியடையாத சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்வது, திருமணம் செய்வது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன.
18 வயது பூர்த்தி அடையாத பெண் மற்றும் 21 வயது நிறைவடையாத ஆணுக்கு திருமணம் செய்யக்கூடாது. இதை மீறி திருமணம் நடந்தால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நீலகிரியில் கடந்த ஜனவரி முதல் இதுவரை சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, திருமணம் செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக 37 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வடமாநில தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டியில் விவசாய பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் உள்ள விளைநிலங்களுக்கு சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
பெற்றோர் கேட்க வேண்டும்
குழந்தைகள் பள்ளி அல்லது வெளியே சென்று திரும்பினால், என்ன நடந்தது என்று பெற்றோர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். வெளி நபரால் ஏதேனும் பிரச்சனை என்றால் என்ன என்று அறிந்து தீர்வு காண வேண்டும்.
பாலியல் போன்ற பிரச்சனை சம்பவம் நடந்தால் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமண தடை சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story