நெமிலியில் கோவில் இடத்தில் கட்டப்பட்ட 9 வீடுகள் அகற்றம்
நெமிலியில் கோவில் இடத்தில் கட்டப்பட்ட 9 வீடுகள் அகற்றம்
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் உள்ள புன்னகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 4,623 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து 9 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது. அந்த வீடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி, துணை ஆணையர் பா.விஜயா முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
அப்போது ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி குடியிருந்து வந்தவர்கள் வீடுகளை இடிக்கக் கூடாது, அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ், நெமிலி தாசில்தார் சுமதி மற்றும் நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட நபர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடம் ஏற்பாடு செய்து தருவதாக அரக்கோணம் கோட்டாட்சியர் சிவதாஸ் கூறினார். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி,கிராமநிர்வாக அலுவலர் ஆனந்தன், சப் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 9 வீடுகளும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என பெயர் பலகை வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட புன்னகேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம், கோவில் செயல் அலுவலர் சித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story