இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா 10 ஆண்டு சிறை


இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு  தலா 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 23 July 2021 10:46 PM IST (Updated: 23 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாகப்பட்டினம்:
போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் இறந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகை மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
ஆட்டோ டிரைவர்
நாகை வடக்கு பால்பண்ணைச்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி தனது ஆட்டோவை நாகூர் அருகே வாஞ்சூர் மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்து இருந்தார். 
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி வைத்திருப்பதாக கூறி ஆட்டோவை அங்கிருந்து எடுக்குமாறு சுரேசிடம் கூறினர். இதில் ஆட்டோ டிரைவர் சுரேசுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சாவு
இதையடுத்து ஆட்டோ டிரைவரை நாகூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஆட்டோ டிரைவர் சுரேஷ் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து சுரேசை சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
அங்கு டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும், ஆட்டோ டிரைவர் சுரேஷ் சிகிச்சை பலனின்றி மறுநாள் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். 
இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை
இதுகுறித்து சுரேசின் மனைவி கலா அளித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு நாகை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நாகை மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி பன்னீர்செல்வம் தனது தீர்ப்பில், ஆட்டோ டிரைவர் சுரேஷ் இறப்புக்கு காரணமான இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார்.

Next Story