கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட முயற்சி
கள்ளக்குறிச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவிவை ஏலம் விட நடந்த முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
கச்சிராயப்பாளையம்
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடந்தது. புதிய மாவட்டங்களாக உதயமான தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.
இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும், அரசியல் கட்சியினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரடிசித்தூர் ஊராட்சி
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கரடிசித்தூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட சிலர் முடிவுசெய்தனர். அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பராமரிப்பு பணி மற்றும் தேர் திருவிழா நடத்துவதற்கு ஆகும் செலவு அனைத்தையும் செய்து தருகிறோம் எனவும், உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் இரவு கிராமம் முழுவதும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்ப்பு
இதையடுத்து நேற்று காலை கோவில் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அங்கு வந்த மற்றொரு தரப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் வாக்களிப்பு முறையில் தான் ஊராட்சி தலைவர் யார் என முடிவு செய்ய வேண்டுமே தவிர, ஏலம் விட நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எச்சரிக்கை
இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் கச்சிராயப்பாளையம் போலீசார் கரடிசித்தூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், அங்கு திரண்டு நின்ற பொதுமக்களிடம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியை யாரும் ஏலம் விடக் கூடாது. கோவில் கட்ட வேண்டும் என்றால் ஊர் மக்களிடம் வசூல் செய்து கோவில் கட்டிக் கொள்ளுங்கள், அதை விட்டுவிட்டு தனி நபரிடம் வசூல் செய்து கோவில் கட்டக்கூடாது. இது சட்டப்படி குற்றம் என்று எச்சரித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story