சாணார்பட்டி அருகே கிணற்றில் தள்ளி 2 பசுக்கள் சாகடிப்பு


சாணார்பட்டி அருகே கிணற்றில் தள்ளி 2 பசுக்கள் சாகடிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 8:05 PM GMT (Updated: 2021-07-24T01:35:23+05:30)

சாணார்பட்டி அருகே கிணற்றில் தள்ளி 2 பசுக்கள் சாகடிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கோபால்பட்டி:
சாணார்பட்டி அருகே உள்ள கூ.குரும்பபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 3 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது மாடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் நேற்று தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, கொட்டகையில் கட்டி வைத்திருந்த 3 பசுக்களையும் காணவில்லை. 
இதனால் அவர் தனது பசுக்களை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் பசுக்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே சுரேசின் 2 பசுக்கள் பக்கத்து தோட்டத்தில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் மிதந்தது. மற்றொரு பசு அருகில் இருந்த வேறொரு கிணற்றில் உயிருடன் நீந்தியபடி இருந்தது. இதுகுறித்து அறிந்த சுரேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். உடனே இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. 
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் உயிருடன் நீந்தியபடி இருந்த ஒரு பசுமாட்டை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் மற்றொரு கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த 2 பசுக்களின் உடல்களையும் மீட்டனர். அப்போது அந்த 2 பசுக்களின் கால்களும் கயிறு மூலம் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ், மர்மநபர்கள் பசுக்களின் கால்களை கயிறு கட்டி கிணற்றில் தள்ளி சாகடித்திருப்பதாக சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 பசுக்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story