அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அரியலூர்,
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூடப்பட்டிருந்ததால், அம்மன் கோவில்களில் நடந்த ஆடி மாத வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் சிறிய அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த கோவில்கள், பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் ேகாவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நேர்த்திக்கடன்
அரியலூர் மேலத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன், படை பத்து மாரியம்மன், பூக்காரத்தெரு மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். கோவில்களில் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக வெகு விமரிசையாக நடைபெறும் பால்குட ஊர்வலங்கள் இந்த ஆண்டு நடைபெறவில்லை. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலில் வழங்கப்பட்டது.
தா.பழூர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை துர்க்கை அம்மன் வார வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story