தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் நீர் பிடிப்பு கொள்ளளவு 32.8 டி.எம்.சி ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை.
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்துவிடப்படுவதாலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் 12 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,872 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.60 அடியாக இருந்தது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 14,938 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 97.50 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1½ அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், பாசனத்திற்காக வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் மொத்தம் வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. மழைக்காலத்தில் 100 அடிக்கு மேல் நீர்மட்டம் உயரும்போது பொதுப்பணித்துறை விதியின் அடிப்படையில் பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டு விட்டால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக பவானி ஆற்றில் திறந்து விடப்படும்.
இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுமாறு அனைத்து அரசுத் துறைகளுக்கும் பவானிசாகர் அணையின் உதவி செயற்பொறியாளர் ஏ.சிங்கார வடிவேலன் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் பவானி ஆற்றின் இருபக்க கரையோரத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
இதேபோல் சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள பிள்ளையார் கோவில் வீதி, பரிசல்துறை வீதி, கோட்டுவீராம்பாளையம் பகுதியிலும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
Related Tags :
Next Story