ரெடிமேடு துணிகள் வாங்கி ரூ.2 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது


ரெடிமேடு துணிகள் வாங்கி ரூ.2 கோடி மோசடி: கணவன்-மனைவி கைது
x
தினத்தந்தி 24 July 2021 5:48 AM GMT (Updated: 2021-07-24T11:18:25+05:30)

ரெடிமேடு துணிகள் வாங்கி ரூ.2 கோடி மோசடி செய்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மொத்தமாக ரெடிமேடு துணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 41), அவரது மனைவி விஜயநிர்மலா (40) ஆகியோர் ரெடிமேடு கடைகள் நடத்தி வருவதாகவும், அவர்களது கடைகளுக்கு ரெடிமேடு துணிகள் சப்ளை செய்யும்படியும் கேட்டனர். அதன்படி ரூ.1½ கோடிக்கு ரெடிமேடு துணிகள் சப்ளை செய்தேன். ஆனால் அவர்கள் ரூ.83 லட்சத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டனர். இது போல் அவர்கள் 11 பேரிடம் துணிகள் வாங்கி ரூ.2 கோடி வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மணிகண்டனும், அவரது மனைவி விஜயநிர்மலாவும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Next Story