டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா?-பா.ஜ.க. தலைவர் கேள்வி


டெல்லியில் பாராட்டிவிட்டு தமிழகம் வந்ததும் மத்திய அரசை குறை கூறுவதா?-பா.ஜ.க. தலைவர் கேள்வி
x
தினத்தந்தி 24 July 2021 7:12 PM IST (Updated: 24 July 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி செல்லும்போது கொரோனா தடுப்பூசியை நிறைவாக வழங்குகிறார்கள் என்று கூறும் நிலையில் தமிழகம் திரும்பியவுடன் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என கூறுவதா? என்று தி.மு.க.வுக்கு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலை

டெல்லி செல்லும்போது கொரோனா தடுப்பூசியை நிறைவாக வழங்குகிறார்கள் என்று கூறும் நிலையில் தமிழகம் திரும்பியவுடன் மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என கூறுவதா? என்று தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

 பா.ஜ.க. தலைவர் வருகை

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று திருவண்ணாமலை வந்தார். இங்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு 30 லட்சம் பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் 10 லட்சம் பக்தர்களும் யாருடைய அழைப்பும் இல்லாமல் வருகிறார்கள். அதன் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஆன்மிக தேடுதல் உள்ளது. 

கிரிவலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை அரசு நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை கொண்டுவர பா.ஜ.க. போராடும். இதற்கான தீர்வை விரைவில் கொண்டு வருவோம்.

உதவி ஆணையரை விடுவிப்பதா? 

‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருக்கக்கூடிய (ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்) ஒருவருக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில பணிகளை செய்யப்பட்டதாக மதுரை உதவி ஆணையர் தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கிறார்.

 இருப்பினும் மதுரை மாநகராட்சி உதவி ஆணையரை பணியில் இருந்து விடுவித்து இருப்பதை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இதுகுறித்து தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரி எந்த தவறும் செய்யவில்லை. அவர் விரைவாக பணியில் அமர்த்தப்பட வேண்டும். 

 கொரோனா தடுப்பூசி

மத்திய அரசு நிர்ணயித்த இலக்கைவிட அதிகமாகவே மாநில அரசுக்கு கொரோனா தடுப்பூசியினை வழங்கி வருகிறது. 

மத்திய அரசு குறைவாக தடுப்பூசி வழங்கி இருந்தால் சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு அறிக்கை கொடுக்கட்டுமே. இவர்கள் டெல்லி செல்லும் போதெல்லாம் மத்திய அரசு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு அளித்து நிறைவான கொரோனா தடுப்பூசியினை வழங்குகிறார்கள் என்றும், மீண்டும் சென்னை வந்தவுடன் பேச்சை மாற்றி தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றும் சொல்கிறார்கள். 

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்படும் என்று சொன்னார்கள். தமிழக அரசிற்கு பெட்ரோல் மூலம் வரும் வருமானத்தை கணக்கிட்டு ரூ.5 மட்டுமில்லாமல் அதற்கு பதில் 6 ரூபாய் 20 பைசா வரை பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். 

சாமானிய மனிதனின் வலியை பா.ஜ.க உணருகிறது. நிச்சயமாக பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும். 

பாரத மாதாவையும், பிரதமரையும், மக்கள் பிரதிநிதிகளையும் தவறாக பேசிய பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருத்து சுதந்திரம் குறைந்து கொண்டே வருகிறது. 

தி.மு.க. கடவுள் இல்லை என்று சொல்கிறது. தி.மு.க. யாரை அழைத்து வந்து கூட்டம் போட்டாலும் ஒரு நாள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் கூட்டத்திற்கு இணையாக வராது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story