திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி கொரோனா 3-வது அலையை சமாளிக்க ஏற்பாடு


திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி கொரோனா 3-வது அலையை சமாளிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 24 July 2021 7:50 PM IST (Updated: 24 July 2021 7:50 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஒரு நிமிடத்தில் 1,580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் :
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருந்தது. உருமாறிய கொரோனா நுரையீரலை அதிகமாக பாதித்ததால், ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. இதையடுத்து வடமாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.
மேலும் ஆக்சிஜனை சேமித்து வைக்க வசதியாக, அரசு மருத்துவமனைகளில் கொள்கலன்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் ஓரிரு மாதங்களில் கொரோனாவின் 3-வது அலை பரவலாம் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர். அவ்வாறு 3-வது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் தேவை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆக்சிஜன் தேவை 
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திட்டம், ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கலன்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் ஆக்சிஜன், அவற்றில் நிரப்பப்பட்டு பின்னர் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையே 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு தயாராக உள்ளது. அதேபோல் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
உற்பத்தி கலன்கள் 
அதன்படி தனியார் பங்களிப்புடன் ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் ஒரு நிமிடத்துக்கு 580 லிட்டரும், ஒரு மணி நேரத்தில் 34,800 லிட்டரும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.
அதேபோல் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மூலம் ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் ஒரு நிமிடத்தில் 1,580 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம். இதனால் நோயாளிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் ஆக்சிஜன் வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story