வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக நகரில் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்படவில்லை. இருப்பினும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் இருசக்கர வாகனங்கள், கார், சுற்றுலா வேன்களில் வந்தனர். இதனால் கொடைக்கானல் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுற்றுலா பயணிகள்
இதனையடுத்து நகராட்சி ஆணையாளர் உத்தரவின்பேரில் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள 2 வழிகளும் திறக்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து ஓரளவு குறைந்த போதிலும் நகர்ப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து நகரில் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவற்றின் அழகை பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அதேபோல் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
=====
பாக்ஸ் மேட்டர்
-------------------
மயில்களின் வருகையும், மகிழ்ச்சியும்
பொதுவாக மயில்கள் குளிர் பிரதேசங்களில் அதிகமாக வசிப்பது இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானல் அருகே மிதவெப்ப பகுதிகளான பேத்துப்பாறை, செண்பகனூர், பெருமாள்மலை உள்பட பல்வேறு இடங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மயில்கள் வர தொடங்கியுள்ளன. இதனால் அவற்றை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மயில்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story