தியாகி குமரன் மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தியாகி குமரன் மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
கோவை
புதிய கடைகளை ஏலம் விடுவதை கைவிட கோரி கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏலம் மூலமாக ஒதுக்க முடிவு
கோவை மத்திய மண்டலம் 83-வது வார்டில் உள்ள தியாகி குமரன் மார்க்கெட்டில் 120-க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மார்க்கெட்டின் அருகே சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை, கோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.
அந்த பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், சிறிய அளவிலான 89 கடைகள் கட்டப்பட்டன. அந்த கடைகளை வருகிற 27-ந் தேதி ஏலம் மூலமாக வியாபாரிகளுக்கு ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே, ஆக்கிரமிப்புகளில் காலி செய்யப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள், பாதிக்கப்பட்ட தங்களுக்கு புதிய கடைகளை ஒதுக்க வேண்டும். ஏலம் விட கூடாது என வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், கடைகளை ஏலம் விட தடை இல்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், புதிய கடைகளை ஏலம் விடுவதை கைவிடக் கோரி தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் திரண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வியாபாரி அமீர் அப்பாஸ் என்பவர் கூறுகையில், இங்கு ஏற்கனவே கடைகளை வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என்றார்.
பேச்சுவார்த்தை
இது குறித்த தகவலின் பேரில், மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்பிரமணியம் உள்பட அதிகாரிகள் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாநகராட்சி சார்பில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே ஏலத்தை ரத்து செய்ய இயலாது.
வியாபாரிகள் மனு அளித்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆணையர் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
அதை ஏற்று வியாபாரிகள் கடைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story