சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு


சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2021 10:44 PM IST (Updated: 24 July 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நாளை தொடங்குகிறது. இதையொட்டி தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம், 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில் கடந்த 2020-21-ம் ஆண்டிற்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

 இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 20 மையங்களில் நடைபெற உள்ளது.


இந்த எழுத்து தேர்வில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 2,256 ஆண்கள், 700 பெண்கள் என மொத்தம் 2,956 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.


முன்னேற்பாடு பணிகளை டி.ஐ.ஜி. ஆய்வு

இந்நிலையில் இத்தேர்வு நடைபெறும் விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் வளாகத்திற்கு நேற்று காலை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் நேரில் சென்று பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தேர்வு பணியில் ஈடுபடக்கூடிய போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களை வரவழைத்து எவ்வாறெல்லாம் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மற்றும் உடல்திறன் தேர்வு பணியில் ஈடுபட வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 

அதோடு தேர்வில் கலந்துகொள்ள வருபவர்களின் உறவினர்களாக போலீசார் யாரேனும் இருந்தால் அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் தேர்வு பணியில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு இருந்தால் அதுபற்றிய விவரத்தை இப்போதே தெரிவித்து விட்டு தேர்வு பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டார்.


அறிவுரை

மேலும் தேர்வுக்கு வரும் நபர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து அதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்று வர வேண்டும் என்பதால் அவ்வாறு மருத்துவ சான்று பெற்று வரும் நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், மருத்துவ சான்று பெற்று வராத தேர்வர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். 

தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் விதம் குறித்து போலீசார் மூலமாக ஒத்திகையும் நடந்தது.

இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தேவநாதன், கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், சின்னராஜ், ராஜலட்சுமி, விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஏழுமலை, தீயணைப்பு அதிகாரிகள் ராபின்காஸ்ட்ரோ, சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story