புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை


புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை
x
தினத்தந்தி 24 July 2021 6:52 PM GMT (Updated: 24 July 2021 6:52 PM GMT)

புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவேண்டும் என்று மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

புதுச்சேரி, ஜூலை.25-
புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கவேண்டும் என்று மத்திய மந்திரியிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விமான சேவை
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான சேவையை தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது புதிதாக பொறுப்பு ஏற்றுள்ளதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, இரவு நேரங்களில் விமானங்கள் இறங்குவதற்கு வசதியாக விமான ஓடுதள பாதையை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் பேசினார்.
உடான் திட்டம்
ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக காரைக்கால் கோவில் நகரத்தை உடான் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை மந்திரி உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story