சோழசிராமணி பகுதியில் வழங்கப்பட்ட 42 கசிவுநீர் நீரேற்று நிலையங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை


சோழசிராமணி பகுதியில் வழங்கப்பட்ட 42 கசிவுநீர் நீரேற்று நிலையங்களுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
x
தினத்தந்தி 25 July 2021 12:48 AM IST (Updated: 25 July 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

சோழசிராமணி பகுதியில் வழங்கப்பட்ட 42 கசிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரமத்திவேலூர்:
ஆய்வு
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி பகுதியில் காவிரி ஆற்றில் 42 இடங்களில் கசிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கசிவுநீர் நீரேற்று நிலையங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது பரமத்திவேலூர் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்க செயலாளர் பெரியசாமி, துணைத்தலைவர் குப்புத்துரை, பொத்தனூர் விவசாயிகள் சங்க தலைவர் செந்தில்நாதன், நன்செய் இடையாறு விவசாயிகள் சங்க செயலாளர் ரவி மற்றும் விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.
இதையடுத்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரத்து செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கி, நாகப்பட்டினம் மாவட்டம் வரை காவிரி டெல்டா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சோழசிராமணி பகுதியில் தற்போது 42 இடங்களில் கசிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இதன் காரணமாக பரமத்திவேலூர் பகுதியில் இருக்கும் ராஜா வாய்க்கால் பாசன விவசாயம் அடியோடு அழியும் நிலை ஏற்படும்.
அதேபோல் டெல்டாவில் கீழ் பாசன விவசாயிகளின் உரிமை அடியோடு பறிபோகும். காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
முற்றுகை போராட்டம்
 இதனை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி திருச்சி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன தலைமை பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகளை திரட்டி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதுபோன்ற பாசன நீர் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் ஐகோர்ட்டுக்கு இணையான அதிகாரம் கொண்ட ஒரு தனி சிறப்பு கோர்ட்டை தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story