புதிய மீன்பிடி மசோதாவை கண்டித்து தூத்தூரில் போராட்டம்
புதிய மீன்பிடி மசோதாவை கண்டித்து தூத்தூரில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
கொல்லங்கோடு:
புதிய மீன்பிடி மசோதாவை கண்டித்து தூத்தூரில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
மீன்பிடி மசோதா
மத்திய அரசு கொண்டு வரும் புதிய மீன்பிடி மசோதாவால் மீனவர்களின் வாழ்வாதாரம் முடக்கப்படும் என்றும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூத்தூர் மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. மீனவர்கள் போராட்ட குழு தலைவர் ஜோஸ்பில்பின் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில், புதிய மீன்பிடி மசோதாவை கைவிட வேண்டும், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல் மேடுகளை அகற்றி, மீனவர்களுடன் ஆலோசனை கேட்டு துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். துறைமுகத்தில் பதிவு செய்துள்ள வள்ளங்கள் மற்றும் விசைபடகுகள் அனைத்திற்கும் மானிய மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போலீஸ் பாதுகாப்பு
இதில் தூத்தூர் கிங்பிஷர் வள்ளம் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், அல் பாரிஸ் ஜீசஸ் படகு உரிமையாளர் சங்கத்தினர், மார்த்தாண்டன்துறை வள்ளம் சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மத்திய அரசு புதி மீன்பிடி மசோதாவை கைவிடவில்லை என்றால் சாலைமறியல் உள்ளிட்ட பலதரப்பு போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில் குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தார். இதில் இரையுமன்துறை முதல் நீரோடி வரை உள்ள 8 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story