லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 மீனவர்கள் பலி
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியானார்கள். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியானார்கள். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி மோதல்
குமரி மாவட்டம் தூத்தூர் அருகே சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் ராபின் (வயது 53). இரவிபுத்தன்துறையை சேர்ந்தவர் சூசை ததேயுஸ் (43). இருவரும் மீனவர்கள்.
நேற்று காலை இவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் மீன்பிடி தொழிலுக்காக முட்டம் மீன்பிடி துறைமுகம் நோக்கி புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை ராபின் ஓட்டி சென்றார். சூசை ததேயுஸ் பின்னால் அமர்ந்திருந்தார்.
மார்த்தாண்டம் அருகே பார்த்திபபுரம் பகுதியில் சென்ற போது, தாளக்கன்விளையில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு தூத்தூர் கடற்கரை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
2 பேர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ராபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சூசை ததேயுஸ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து புதுக்கடை போலீசார் 2 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
மேலும் இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த விஜிகுமார் புதுக்கடை போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 மீனவர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story