கோசாலைகளுக்கு சொந்தமான 4,514 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு; மந்திரி அங்காரா பேட்டி
சிக்கமகளூரு மாவட்டத்தில் கோசாலைகளுக்கு சொந்தமான 4,514 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மந்திரி அங்காரா தெரிவித்தார்.
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டத்தில் கோசாலைகளுக்கு சொந்தமான 4,514 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மந்திரி அங்காரா தெரிவித்தார்.
தரிசு நிலங்கள்
சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு மந்திரி அங்காரா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி அங்காரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள், தரிசு நிலங்களை வனத்துறை மற்றும் வருவாய் துறையினர் சர்வே செய்து, பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இன்றி மீட்க வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளையும் அதிகாரிகள் தீர்த்து வைக்க வேண்டும். சிக்கமகளூரு மாவட்டத்தில் மொத்தம் 52,900 ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன.
கிராமப்புறங்களில் உள்ள தரிசு நிலங்களை அரசு பள்ளி, அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் கட்ட ஒதுக்கலாம்.
4,514 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு
அரசுக்கு சொந்தமான நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் அதனை சட்டப்படி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலங்களை மீட்க வேண்டும். சிக்கமகளூரு மாவட்டத்தில் 13 கோசாலைகள் உள்ளன. இந்த கோசாலைகளுக்கு சொந்தமாக 14,339 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில், 4,514 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றில் தற்போது 258 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4,266 ஏக்கர் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வனப்பகுதிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், வனத்துறையினர் முறையாக நோட்டீசு வழங்கி, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சிக்கமகளூரு மாவட்டத்தில் கொரோனா 3-வது அைல பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் தயாராக இருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அங்கு மருந்துகள், ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதிகளை தேவையான அளவு வைத்திருக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மாவட்டத்தில் தற்போது அதிகமாக மழை பெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு சேத விவரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் ரமேஷ், மேல்சபை துணைத்தலைவர் பிரானேஷ், எம்.எல்.ஏ.க்கள் பெல்லி பிரகாஷ், ராஜேகவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story