சிவமொக்காவில் மழை சேதங்களை பார்வையிட சென்ற மந்திரி ஈசுவரப்பாவிடம் வாக்குவாதம் செய்த பெண்கள்
சிவமொக்காவில் மழை சேதங்களை பார்வையிட சென்ற மந்திரி ஈசுவரப்பாவிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.
சிவமொக்கா: சிவமொக்காவில் மழை சேதங்களை பார்வையிட சென்ற மந்திரி ஈசுவரப்பாவிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.
மந்திரி ஆய்வு
மலைநாடு மாவட்டமான சிவமொக்காவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
சிவமொக்கா நகரையொட்டி உள்ள துங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், நகருக்குள் தண்ணீர் புகுந்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிவமொக்கா நகரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட பொறுப்பு மந்திரி ஈசுவரப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குவாதம்
அப்போது அவர் சிவமொக்கா சாந்தம்மா லே-அவுட் பகுதியில் மழை சேதங்களை பார்வையிட சென்றபோது, அங்குள்ள பெண்கள் ஈசுவரப்பாவை சூழ்ந்துகொண்டனர். அவர்கள் மந்திரி ஈசுவரப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக துங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்து பலத்த சேதங்களை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும், மழை காலத்தில் ஆற்று தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நிரந்தர தீர்வு
அப்போது மந்திரி ஈசுவரப்பா கூறுகையில், துங்கா ஆற்றில் வெள்ளம் வந்தால் 15 இடங்கள் வழியாக தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது. அதனை கண்டறிந்து ஆற்றங்கரையை சுற்றி உயர்ந்த தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 4 வழிகளில் மட்டுமே தண்ணீர் குடியிருப்புக்குள் நுழைகிறது. அந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதையடுத்து அந்தப்பகுதி பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வின்போது கலெக்டர் சிவக்குமார், மேயர் சுனிதா அன்னப்பா உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story