மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முதல்கட்டமாக ரூ.950 கோடி நிதி ஒதுக்கீடு; மந்திரி ஆர்.அசோக் தகவல்
மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முதல்கட்டமாக ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
ஹாசன்: மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய முதல்கட்டமாக ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
மந்திரி அசோக் ஆய்வு
ஹாசன் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஹாசனில் மழை வெள்ள பாதிப்புகளை வருவாய் துறை மந்திரி ஆர்.அசோக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் மழை சேத விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தாா். அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.950 கோடி ஒதுக்கீடு
ஹாசன் உள்பட மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகர்நாடகத்தில் மழை வெள்ள சேதங்களை நாளை (அதாவது, இன்று) எடியூரப்பா பார்வையிடுகிறார். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடம் மீட்பு குழுவினர் இணைந்து மீட்டு வருகிறார்கள். இதற்காக மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்ய, முதல்கட்டமாக ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளை இழந்த மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். முதல்கட்டமாக அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
25 நாட்களில்...
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே தோனிக்கல் பகுதியில் சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தேன். இதுகுறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து உள்ளேன். இன்னும் 25 நாட்களில் நிலச்சரிவை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டள்ளதால், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story