திருச்சியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த ஐ.டி.ஐ. மாணவர் தவறி விழுந்து பலி டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு

திருச்சியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த ஐ.டி.ஐ. மாணவர் தவறி விழுந்து பலி டிரைவர், கண்டக்டர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 July 2021 7:57 AM IST (Updated: 25 July 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் தவறி விழுந்து பலியானார். டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மலைக்கோட்டை
திருச்சியில் அரசு பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர் தவறி விழுந்து பலியானார். டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

ஐ.டி.ஐ. மாணவர்

திருச்சி சுப்பிரமணியபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் ஹரிஹரன் (வயது 22). இவர் திருவெறும்பூரில் ஐ.டி.ஐ. ஒன்றில் வெல்டிங் ஆய்வுக்கான கோர்ஸ் படித்து வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து துவாக்குடி செல்லும் அரசு டவுன் பஸ்சில் நேற்று முன்தினம் பயணம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால், பஸ்சின் பக்கவாட்டு படிக்கட்டில் அவர் பயணம் செய்தார். திருச்சி- சென்னை பை-பாஸ் சாலை செந்தண்ணீர்புரம் திருவள்ளுவர் நகர் பிரிவு ரோடு அருகே சென்றபோது, அரியமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

தவறி விழுந்து பலி

இதனால், படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஹரிஹரன் எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மகேஸ்வரன், கண்டக்டர் அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story