சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம்
முத்தூர் பகுதிகளில் காய்கறிகள் மற்றும் மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.
முத்தூர்
முத்தூர் பகுதிகளில் காய்கறிகள் மற்றும் மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கூறியுள்ளார்.
கீழ்பவானி பாசன பகுதிகள்
முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தின் மூலம் ஆண்டு முழுவதும் மஞ்சள், வாழை, கரும்பு, நஞ்சை சம்பா நெல், எண்ணெய்வித்து பயிர்கள், காய்கறி பயிர்கள் மற்றும் மா, சப்போட்டா, எலுமிச்சை ஆகிய வேளாண்மை, தோட்டக்கலை சார்ந்த பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முத்தூர், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், ஊடையம், மேட்டுப்பாளையம், வேலம்பாளையம், பூமாண்டன்வலசு, சின்ன முத்தூர் ஆகிய வருவாய் கிராம பகுதிகளை சேர்ந்த மரவள்ளி கிழங்கு மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்து உள்ள விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 2020-2021- ம் ஆண்டு பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட உள்ளது.
சொட்டு நீர் பாசனம்
மரவள்ளி கிழங்கு மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், மற்ற இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர் பாசன கருவிகள் வழங்கப்படுகிறது.
இதன்படி இப்பகுதி மரவள்ளி கிழங்கு மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத் துறையின் மூலம் ஒரு ஏக்கருக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 781 வரையிலும், மற்ற இதர விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.33 ஆயிரத்து 231 வரையிலும் மானியம் தற்போது வழங்கப்படுகிறது. மேலும் இதற்கான சொட்டு நீர் பாசன கருவிகளுக்கான ஜி.எஸ்.டி வரியினை அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடிவு பெற்று இருந்தால் மீண்டும் அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இத்திட்டத்தில் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க தங்களுக்கு விருப்பமான அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே மரவள்ளி கிழங்கு மற்றும் காய்கறிகள் சாகுபடி விவசாயிகள் தோட்டக்கலைத்துறையின் மானிய திட்டத்தில் சேர்ந்து சொட்டு நீர் பாசனம் அமைத்து கோடை காலத்தில் குறைந்த நீர் மேலாண்மையில் அதிக மகசூல் பெற முன்வர வேண்டும்.இத்தகவலை வெள்ளகோவில் வட்டார உதவி இயக்குனர் யு.சர்மிளா தெரிவித்து உள்ளார்.
----
Reporter : Sakthivel.K Location : Tirupur - Dharapuram - Muthur
Related Tags :
Next Story