பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வந்து குவிந்தனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, கார்த்திகை, வார விடுமுறை உள்ளிட்ட நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிகாலை முதலே பழனி அடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நுழையும் இடமான குடமுழுக்கு நினைவரங்கம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தற்போது பழனி ரோப்கார் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
மேலும் மலைக்கோவிலில் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story