திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன். கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளதாக, கலெக்டா் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் தொடங்க வசதி
தமிழகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பட, முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களை தொடங்க, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பட்டம், பட்டயம், தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருத்தல் வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இத்திட்டத்துக்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25 சதவீதம் அதிகபட்ச மானியம் ரூ.50 லட்சம் வரை பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், சி.என்.சி. லேத் எந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பேப்பர் போர்ட், ஜெ.சி.பி, போர்வெல் வாகனம், கிரேன்கள், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.
கோவிட்-19 காரணமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் நேர்முக தேர்வின்றி நேரடியாக வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.
நேரில் தொடர்பு கொள்ளலாம்
திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். தற்போது கோவிட் -19 காரணமாக தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து செப்டம்பர் மாதம் 2021-ம் ஆண்டு வரை அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story