தர்மபுரி அருகே 1,300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98 லட்சத்தில் உபகரணங்கள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்


தர்மபுரி அருகே 1,300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98 லட்சத்தில் உபகரணங்கள் கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்
x
தினத்தந்தி 26 July 2021 12:56 AM IST (Updated: 26 July 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அதியமான் கோட்டத்தில் 1,300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் திவ்யதர்சினி வழங்கினார்.

தர்மபுரி:

உதவி உபகரணங்கள்
தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா தர்மபுரி அதியமான் கோட்டத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். செந்தில்குமார் எம்.பி., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 1,300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களுடைய நலனை பாதுகாக்கவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 40 சதவீத பாதிப்பு இருந்தாலே அவர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, திருமண நிதி உதவி, மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி, மாதாந்திர ஓய்வூதியம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கொரோனா தடுப்பூசி
சிறப்பு திட்டமாக மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்கள் முழுவதும் இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றை அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே நேரடியாக வழங்க அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளின் வசதிக்கேற்ப தாலுகா அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களை பெற்று அவற்றை முறையாக பயன்படுத்தி தங்கள் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை எளிதாக்கி கொள்ளவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். இந்த விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, நிறுவன முதுநிலை மேலாளர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் மாது சண்முகம், சத்யாசேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், சகிலா, ஊராட்சிமன்ற தலைவர்கள் கலைச்செல்வன், ஆறுமுகம், ஒன்றியக்குழு உறுப்பினர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story