கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.95 கோடி அபராதம் வசூல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.1 கோடியே 95 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் கொரோனாவால் 41 ஆயிரத்து 120 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 40 ஆயிரத்து 427 பேர் குணமடைந்துள்ளனர். 375 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 321 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 42 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு வெளி மாவட்டத்தில் 12 பேரும், தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தில் 12 பேரும் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என மொத்தம் 375 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ரூ.1.95 கோடி வசூல்
இதுவரை மாவட்டத்தில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 475 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 879 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். தற்போது மாவட்டத்தில் 2,402 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக 1 கோடியே 95 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story