கட்டணத்தை குறைக்கக்கோரி சுங்கச்சாவடி முற்றுகை- மறியல்


கட்டணத்தை குறைக்கக்கோரி சுங்கச்சாவடி முற்றுகை- மறியல்
x
தினத்தந்தி 26 July 2021 1:44 AM IST (Updated: 26 July 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே கட்டணத்தை குறைக்கக்கோரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடந்ததால், நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னம்:

கட்டணம் வசூல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பெரம்பலூர் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் பேரளி கிராமத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி 4 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் செயல்பாட்டுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சுங்கச்சாவடியில் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை வசூல் செய்ய வேண்டிய உபயோகிப்பாளர் கட்டண தொகையை, அந்த வழியாக லாரி மற்றும் அனைத்து வாகனங்கள் செல்லும்போது, ஒவ்வொரு முறையும் வசூலிப்பதாக கூறியும், கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் திடீரென பேரளி சுங்கச்சாவடியை நேற்று முற்றுகையிட்டனர். மேலும் லாரிகளை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று பேச்சுவார்த்தை
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கிய பிரகாசம், மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன், நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை முடிவில் இன்று(திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் சுங்கச்சாவடியை நடத்தும் தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உபயோகிப்பாளர் கட்டண தொகை நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து உரிமையாளர்கள் சாலை மறியலை கைவிட்டு லாரிகளை அங்கிருந்து ஓட்டிச்சென்றனர். மற்ற வாகனங்களும் அங்கிருந்து சென்றன. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பேரளி சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வந்த இரண்டாவது நாளே சாலை மறியல் போராட்டம் நடந்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story