பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - சுற்றுலா பயணிகள்


பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் - சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 26 July 2021 1:45 AM IST (Updated: 26 July 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள்- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

மீன்சுருட்டி:

உலக புராதன சின்னம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. அக்கால போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில், தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால் விடும் வகையில், சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவலிங்கம், சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் ஆகியவை பிரசித்தி பெற்றது.
இக்கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோவிலின் கலை நயத்தை கண்டு வியப்பார்கள்.
பக்தர்களுக்கு அனுமதி
இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இக்கோவிலுக்கு வெளிநாட்டு வருகை தடைபட்டுள்ளது. பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வெளிமாநில, வெளிமாவட்ட, வெளியூர் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வர முடியாத நிலை இருந்தது. மேலும் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகம விதிகளின்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
ஏராளமானவர்கள் வந்தனர்
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலை காண வந்திருந்தனர். அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் கோவில் வளாக பகுதியில் இளைப்பாறிவிட்டு, அங்கிருந்து சென்றனர். கொரோனா பரவல் உள்ள நிலையில் பக்தர்கள் பலரும் முககவசம் அணியாமல் வந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story