சிவமொக்கா-உத்தரகன்னடா, பெலகாவி மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 83 பேர் பத்திரமாக மீட்பு
சிவமொக்கா, உத்தரகன்னடா, பெலகாவி மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 83 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மூதாட்டி ஒருவர் வெள்ளத்தில் சிக்கி இறந்ததாக கர்நாடக அரசு கூறியுள்ளது.
பெலகாவி: சிவமொக்கா, உத்தரகன்னடா, பெலகாவி மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 83 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மூதாட்டி ஒருவர் வெள்ளத்தில் சிக்கி இறந்ததாக கர்நாடக அரசு கூறியுள்ளது.
கனமழை கொட்டியது
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பெலகாவி, உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு சற்று கனமழை கொட்டியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றது.
சில சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். இந்த நிலையில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவமொக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து துங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த ஆற்றின் அருகில் வசிக்கும் வீடு ஒன்று வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சிவமொக்கா மாவட்டம் ஒலேபைரனஹள்ளி கிராமத்தில் 70 வயது மூதாட்டி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
83 பேர் மீட்கப்பட்டனர்
பெலகாவி மாவட்டம் கோகாக் அடிபட்டி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 13 பேரும், உத்தரகன்னடா எல்லாபுரா கலசி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 60 பேரும் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆகமொத்தம் சிவமொக்கா, உத்தரகன்னடா, பெலகாவி ஆகிய 3 மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய 83 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story