குண்டும், குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதி


குண்டும், குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 26 July 2021 3:24 AM IST (Updated: 26 July 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

உப்பட்டியில் குண்டும், குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பந்தலூர்

உப்பட்டியில் குண்டும், குழியுமான சாலையால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இணைப்பு சாலை

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து தொண்டியாளம், குந்தலாடி, முக்கட்டி, உப்பட்டி வழியாக பாட்டவயலுக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையானது கேரள மாநிலம் சுல்தான்பத்தேரிக்கு செல்லும் இணைப்பு சாலை என்பதால், வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். 

அதாவது கூடலூரில் இருந்து பந்தலூர் வழியாக பாட்டவயல், அய்யன்கொல்லி போன்ற கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பச்சை தேயிலை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

குழிகளில் தண்ணீர் தேங்கி...

இந்த நிலையில் அந்த சாலையில் உப்பட்டி கிராமத்தில் ரேஷன் கடைக்கு அருகில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. 

மேலும் அந்த வழியாக விரைவாக மருத்துவம் உள்பட அவசர தேவைகளுக்கு சென்று வர முடிவது இல்லை. இது தவிர வாகனங்களும் அடிக்கடி பழதாகி விடுகிறது. இதனால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து உப்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:- எங்கள் கிராமம் மற்றும் சுற்றி உள்ள ஊர்களின் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக அரசு பஸ் தவிர ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் வெளியிடங்களுக்கு சென்று வருகிறோம். சில நேரங்களில் அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட விரைவாக செல்ல முடியவில்லை. பிற வாகனங்களுடன் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அந்த சாலையால் பழுதடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே பழுதடைந்து கிடக்கும் அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படவில்லை. இனிமேலாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story