பழைய பொருட்களால் ஆன மாதிரி வடிவங்களின் கண்காட்சி


பழைய பொருட்களால் ஆன மாதிரி வடிவங்களின் கண்காட்சி
x
தினத்தந்தி 26 July 2021 3:24 AM IST (Updated: 26 July 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பழைய பொருட்களால் ஆன மாதிரி வடிவங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்

கூடலூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பழைய பொருட்களால் ஆன மாதிரி வடிவங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

திடக்கழிவு மேலாண்மை

கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதியில் தினமும் சேரக்கூடிய குப்பை கழிவுகளை தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று சேகரித்து வருகின்றனர். 

இந்த குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பின்னர் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 27-வது மைல் பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. 

இங்கு பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

கண்காட்சியகம்

பொதுவாக குப்பைகள் கொட்டும் கிடங்கு என்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருக்கும் என்று அனைவரும் கருதுவார்கள். ஆனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இயற்கை உரம் தயாரிப்பதால் கூடலூர் நகராட்சி கிடங்கில் துர்நாற்றம் வீசுவதில்லை. கிடங்கை சுற்றி அழகு செடிகள் நடப்பட்டு பூங்கா போல அழகுபடுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து குழந்தைகளை கவரும் வகையில் பழைய பொருட்களால் மாதிரி ரெயில், டிராக்டர், வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட வடிவங்கள் கொண்ட கண்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இது காண்போரை மிகவும் கவர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் ஆய்வு நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் ஜோதிமணி, நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கில் மேற்கொண்ட பணியினை பாராட்டினார். 

குழந்தைகளை கவரும்...

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:- திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதேபோல் சுகாதாரத்தை பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் குப்பை கிடங்கு போல் இல்லாமல் பூங்கா மற்றும் மாதிரி கண்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதை பொதுமக்கள் பார்க்கும்போது குடியிருப்பு பகுதிகளிலும் சுகாதாரத்தை பேணலாம் என்ற விழிப்புணர்வு உண்டாகும். இதனால் குப்பை கிடங்கு அழகுபடுத்தப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story