திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 26 July 2021 5:54 AM GMT (Updated: 26 July 2021 5:54 AM GMT)

ஆந்திராவிற்கு ரெயிலில் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் அதிரடியாக மீட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கவரைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தி செல்வதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜான் சுந்தர் தலைமையில் திருவள்ளூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை செல்லும் ரெயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தேசப்பன் (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தலா 50 கிலோ எடைகொண்ட 22 ரேஷன் அரிசி மூட்டைகள் என மொத்தம் 1,100 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தேசப்பனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story