முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 26 July 2021 9:52 AM GMT (Updated: 26 July 2021 9:52 AM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கூடலூர்:
தமிழக - கேரள மாநில எல்லையில் 152 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்பட 5 மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல் போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடியும் தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கனஅடியும் என 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழைதொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர் மட்டம் 136.05 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 631 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இன்னும் 6 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதாவது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 900 கன அடியிலிருந்து 1,867 கன அடியாக அதிகரித்தது. இவ்வாறு வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் லோயர்கேம்பில் உள்ள நீர்மின் நிலையத்தில் மின்உற்பத்தி  83 மெகாவாட்டில் இருந்து 168 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story