மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் + "||" + panimayamatha church festival flag hoisting at thoothukudi

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பனிமயமாதா ஆலய திருவிழா
தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 5-ந் தேதி வரை நடைபெறும். அதன்படி 439-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பக்தர்கள் யாரும் இல்லாமல் கொடியேற்ற விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். இதில் ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மற்றும் பாதிரியார்கள், பேராலய நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வழக்கமாக கொடியேற்ற விழாவில் சாதி, மத, இனப் பாகுபாடு இன்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ந்து 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கொடியேற்ற விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யுடியூப், ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பார்த்து பிரார்த்தனை செய்தனர்.
பொன் மகுடம்
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பேராலயத்தில் வீற்றிருக்கும் தூய பனிமய மாதா அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மக்கள் அதிகம் கூடும் நற்கருணை பவனி, சப்பர பவனி ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் ஆலயத்துக்குள் நடைபெறும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகள் பக்தர்கள் பங்கேற்பின்றி வழக்கம் போல நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி இரவு 7 மணியளவில் திருவிழா சிறப்பு மாலை ஆராதானையும், 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலியும் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற உள்ளது.