பெரியகுளம் அருகே மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை


பெரியகுளம் அருகே மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும்  கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2021 6:33 PM IST (Updated: 26 July 2021 6:33 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தங்கதமிழ்செல்வன் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில், பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பாறை, ஊரடி, ஊத்துக்காடு ஆகிய மலைக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறையில் இருந்து கரும்பாறை கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், "போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள அகமலை ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாறை கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்லவும், தோட்டங்களுக்கு விவசாய இடுபொருட்களை கொண்டு செல்லவும் சாலை வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறையில் இருந்து தங்கள் கிராமத்துக்கு சாலை அமைக்க வேண்டும் என்று இந்த மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு சாலை அமைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். கலெக்டரும் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்" என்றார்.
ஆக்கிரமிப்பு
முன்னதாக தங்கதமிழ்செல்வன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) சுமோஷ் சோமனை சந்தித்து சாலை அமைப்பதற்கு வனத்துறை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுபோல், ஆண்டிப்பட்டி அருகே ராஜகோபாலன்பட்டி ஊராட்சியை சேர்ந்த பெண்கள் முன்னேற்ற ஆதாரமைய சங்க தலைவி பசுபதி தலைமையில் பெண்கள் சிலர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், ஆதிதிராவிடர் பெண்கள் சங்கத்துக்கு வழங்கப்பட்ட அரசு நிலத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும் கூறியிருந்தனர்.


Next Story