மாவட்ட செய்திகள்

போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது + "||" + Fitness selection for police service has begun

போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது

போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது
திண்டுக்கல்லில் போலீஸ் பணிக்கான உடல்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது.
திண்டுக்கல்:

உடல் தகுதி தேர்வு 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை போலீஸ்காரர்கள், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நேற்று முதல்கட்ட உடல்தகுதி தேர்வு தொடங்கியது. 

அதன்படி திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உடல்தகுதி தேர்வு தொடங்கியது. 

இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,547 ஆண்கள், 553 பெண்கள், தேனி மாவட்டத்தில் 1,259 ஆண்கள், 333 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 692 பேருக்கு திண்டுக்கல்லில் உடல்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. 

ஆனால் கொரோனா பரவலால் தினமும் 500 பேர் மட்டுமே உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்று சான்றுடன், முககவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

சான்றிதழ் சரிபார்ப்பு-ஓட்டம் 

இதைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு உடல்தகுதி தேர்வு தொடங்கியது. இதற்காக காலை 5 மணிக்கே இளைஞர்கள் ஆர்வமுடன் வந்து காத்தி இருந்தனர். இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்களுக்கு முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 

அதன்பின்னர் மார்பளவு, உயரம் அளத்தல் போன்றவை நடைபெற்றன.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் போலீஸ் வேலை கனவில் வந்த இளைஞர்கள் மின்னல் வேகத்தில் ஓடினர்.

 இளைஞர்கள் பந்தய தூரத்தை கடக்கும் நேரத்தை கணக்கிடுவதற்கு டிஜிட்டல் கெடிகாரம் பயன்படுத்தப்பட்டது. இந்த உடல்தகுதி தேர்வு முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது. 

இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
இதற்கிடையே முதல் நாளான நேற்று 394 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.

 அதில் 322 பேர் 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். மேலும் முதல்கட்ட உடல்தகுதி தேர்வு வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. அதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு 5-ந்தேதி முதல் 2-ம் கட்ட உடல்தகுதி தேர்வு நடக்கிறது.

----