மாவட்ட செய்திகள்

தபால் ஓட்டுகளால்தான் வெற்றி பெற்றேன். கட்சியினர் துரோகம் செய்து விட்டனர். அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு + "||" + The parties have been betrayed

தபால் ஓட்டுகளால்தான் வெற்றி பெற்றேன். கட்சியினர் துரோகம் செய்து விட்டனர். அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

தபால் ஓட்டுகளால்தான் வெற்றி பெற்றேன். கட்சியினர் துரோகம் செய்து விட்டனர். அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு
கட்சியில் சிலர் துரோகம் செய்துவிட்டதாகவும், தபால் ஓட்டுகளால்தான் வெற்றிபெற்றதாகவும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
திருவலம்

பொது உறுப்பினர் கூட்டம்

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் திருவலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி தலைமை தாங்கினார். காட்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தணிகாசலம் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

துரோகம் செய்து விட்டனர்

நடைபெற்ற காட்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தலின் போது நாம் ஜெயித்து விடுவோம் என்று சிலர் சரியாக வேலை செய்யாமல் இருந்து விட்டனர். அதோடு மட்டுமல்லாமல் நம் கட்சியில் முதல் முறையாக சிலர் துரோகம் செய்து விட்டனர். நல்ல வேளையாக தபால் ஓட்டினால் நான் ஜெயித்து விட்டேன். அமைச்சரும் ஆகிவிட்டேன். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் இவ்வாறு இருக்காமல், உள்ளாட்சியின் அனைத்து பதவிகளிலும் நமது கட்சியினர் வெற்றி பெற வேண்டும். அதற்காக கடுமையாக ஒற்றுமையுடன் உழையுங்கள்.

 அம்முண்டியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை கொண்டு வந்தது நான். இது போன்று காட்பாடி தொகுதியில் குறைகளே இல்லாத அளவுக்கு பணிகளை செய்துள்ளேன். ஆனாலும் நீங்கள் எனக்கு சரியாக வேலை செய்யவில்லை. குறிப்பாக திருவலம் பகுதியில் எனக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கோட்டையாக இருந்த திருவலத்தை தி.மு.க. கோட்டையாக மாற்றி இருந்தோம். எனக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்தவர்களை நான் மன்னிக்கிறேன். ஒரு குழந்தை தாயை கடித்துவிட்டால் தன் குழந்தை மேல், தாய் கடிந்து கொள்வதில்லை. அது போல் நான் தாயைப் போன்று துரோகம் செய்த நமது கட்சிக்காரர்களை மன்னித்து அவர்களுக்கும் உதவிகளை செய்வேன். 

சர்வாதிகாரியாக செயல்படுவேன்

இனியாவது நல்ல முறையில் கட்சிப் பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் நமது கட்சியினரை வெற்றிபெற செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் நான் சர்வாதிகாரி போல் செயல்படுவேன். யாரை நிற்க வைத்தால் வெற்றி பெறுவார் என்று தீர்மானித்து அவரை நிற்க வைப்பேன். அவரை நீங்கள் வெற்றிபெற செய்யுங்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நரசிம்மன் ஆகியோரும் பேசினர். துரை சிங்காரம், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் சரவணன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் கோரந்தாங்கல் குமார், திருவலம் நகர செயலாளர் நேரு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் குகையநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.