மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர்
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விடுதலைவிரும்பி, மாவட்ட துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்க்குமரன், மாநிலக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணை கட்ட மேற்கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதை கருத்தில் கொண்டு மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது. தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் துணை ஆறான மார்க்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியுள்ள அணையால் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அணையை இடித்து அகற்ற வேண்டும்
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் கோபால், கிருஷ்ணராஜ், சிவன், மாதையன் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story