கடந்த 5 ஆண்டு கால இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும்


கடந்த 5 ஆண்டு கால இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும்
x
தினத்தந்தி 26 July 2021 10:30 PM IST (Updated: 26 July 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநிலத்தில் கடந்த 5 ஆண்டு கால இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் உறுதியளித்தார்.

புதுச்சேரி, ஜூலை.
புதுவை மாநிலத்தில் கடந்த 5 ஆண்டு கால இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் உறுதியளித்தார்.
மருத்துவ உபகரணங்கள்
மத்திய அரசின் என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.) கீழ் புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
நிகழ்ச்சிக்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயசங்கர் வரவேற்று பேசினார். கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.பி.ரமேஷ், நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபு, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலாளர் அருண் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 
விழாவில் என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குனர் அருள்முருகன் மருத்துவ உபகரணங்களை மருத்துவக்கல்லூரி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 
விழாவில் சபாநாயகர் செல்வம் பேசியதாவது:-
புதுவைக்கு மானியம்
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி மலர்ந்ததில் இருந்து நேர்மையான, தூய்மையான ஒரு ஆட்சியை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார். நிதி நெருக்கடி உள்ளதால் புதுச்சேரிக்கு மத்திய அரசு முன்பு வழங்கியது போல் 70 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு மானியத்தை உயர்த்தி வழங்கும் போது மாநிலம் வளர்ச்சியடையும்.
புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும். அரசு ஊழியர்கள் அனைவரின் கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றி தரப்படும். அதற்கான உத்தரவாதத்தை சபாநாயகர் என்ற முறையில் நான் அளிக்கின்றேன்.
`பெஸ்ட் புதுச்சேரி’
புதுவைக்கு சமீபத்தில் 3 முறை பிரதமர் வந்துள்ளார். அப்போது அவர் கல்வி, ஆன்மிகம், சுற்றுலா, வணிகம் என அனைத்து துறைகளிலும் மேம்படுத்தி `பெஸ்ட் புதுச்சேரி' உருவாக்கப்படும் என கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளை        பா.ஜ.க. - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மேற்கொள்ளும்.
கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்றியதில் மிக முக்கிய பங்கு இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தான் உள்ளது. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுவையில் தற்போது கொரோனா  பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துவிட்டது. இறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்ஜியமாக மாறிவிடும் என நம்புகிறேன்.
காலி பணியிடம் நிரப்பப்படும்
இந்த மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தேவையான மருத்துவ உபகரணங்களும் வாங்கப்படும். தமிழகத்தில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர். இது நமக்கு கிடைத்த பெருமையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story