கிணத்துக்கடவு சுல்தான்பேட்டையில் 2207 பேருக்கு கொரோனா தடுப்பூசி


கிணத்துக்கடவு சுல்தான்பேட்டையில் 2207 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 26 July 2021 5:03 PM GMT (Updated: 26 July 2021 5:03 PM GMT)

கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டையில் 2,207 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டையில்  2,207 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

1,207 பேருக்கு தடுப்பூசி 

கிணத்துக்கடவு அருகே உள்ள கோவிந்தாபுரம், தாமரைக்குளம், தேவரடி பாளையம், காரசேரி ஆகிய பகுதிகளில் நேற்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. இது குறித்து காலையில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன்பேரில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன் பெற்றுக்கொண்டனர். பின்னர் டோக்கன் பெற்றவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் 1,207 பேருக்கு டாக்டர்கள் கொரோனா தடுப்பூசி போட்டனர். 

இதில் நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அதிகாரி சித்ரா, டாக்டர்கள் சமீதா, லோகநாதன், சிவா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக டோக்கன் பெற பலர் நீண்டவரிசையில் காத்து நின்றனர். ஆனால் ஒரு கிராமத்துக்கு 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுல்தான்பேட்டை 

அதுபோன்று சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நேற்று கம்மாளப்பட்டி, பூராண்டாம்பாளையம், மலப்பாளையம், வாரப்பட்டி ஆகிய 4 இடங்களில் 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 

மேலும் அப்பநாயக்கன்பட்டியில் பொதுமக்கள் 106 பேருக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் டாக்டர்கள் சபரி ராம், பரத்குமார், சூர்யா, சுந்தர், பவித்ரா, கிருஷ்ண பிரபு மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் ஈடுபட்டனர் 

இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அதிகாரி வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story